ஜோ பைடனை வரவழைக்க ரூ.1.25 லட்சம் கோடி செலவு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமர் மோடி சுமார் ரூ.1.25 லட்சம் கோடி செலவிடுகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ் அம்பேத்கர், பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.1.25 லட்சம் கோடி வழங்க பிரதமர் முன்வந்துள்ளார். இதன்காரணமாகவே ரஷ்ய அதிபர் ஜி20 மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வருவதை தவிர்த்துள்ளார். அமெரிக்காவில் ஊர்வலம் போக, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் தேர்தல் நிதி வாங்க மோடி அமெரிக்க தலைவர்களை மகிழ்விக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜி-20 மாநாடு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமான மூலம் இந்தியா வந்தடைந்தார். அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார் .அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜோ பைடன் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடதக்கது.