திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - பிரேமலதா இரங்கல்!
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் பாதுகாப்பு மற்றும் தரமான சிகிச்சை நடைமுறைகளை வலியுறுத்தாத திமுக அரசின் செயலற்ற போக்கு கண்டனத்திற்குரியது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான உரிய நிவாரணம் அந்த மருத்துவமனை வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கி, அவர்கள் உடனடி உடல்நலத்துடன் மீண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.தீ விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு இத்தகைய தரம் இல்லாத மருத்துவமனைகளை அரசு கண்காணித்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் எங்கும் நடைபெறாதவாறு தவிர்க்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அனைவருக்கும் சிறந்த சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யத் திமுக அரசை வலியுறுத்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


