அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

 
premalatha

சோதனைக்காக சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியில் வருமானவரி அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். கடமையை செய்ய வந்த அதிகாரிகள் தங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என போலீசார் சொல்வது வேடிக்கையாக உள்ளது. காவல்துறை இன்று ஏவல் துறையாக மாறியுள்ளது. அதிகாரிகளை தாக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை தான் கைது செய்ய வேண்டும். அப்போது தான் கடமையை செய்ய வரும் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். புதிய நாடாமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை ஆகும். அதில் எதற்கு சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்? என தெரியவில்லை.  

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என பா.ஜ.க. ஆட்சியின் போது கூறினார்கள். தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதைப்பற்றியே பேசுகிறார்கள். அணை கட்டுவதை தமிழகமும், தமிழர்களும் அனுமதிக்கமாட்டார்கள். மேகதாது விவகாரம் 2 மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.