வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களை அழைத்து விஜய் உதவி செய்தது தவறில்லை- பிரேமலதா

 
 பிரேமலதா

வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களை அழைத்து விஜய் உதவி செய்தது தவறில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்


கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளது. ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் 4 பள்ளிகள், இடுகாடு, 3 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அங்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டு தற்போது பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துக்களில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் சென்று வர ஏதுவாக பாதை அமைக்க வேண்டும். இல்லையெனில் தேமுதிக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டியிருந்தால் இதுபோன்று வெள்ளம் வந்திருக்காது. பாதிக்கப்பட்ட இடங்களில் ரேசன் கார்டுக்கு ரூ.10,000, விவசாயிகளுக்கு ரூ.50,000 வழங்கவேண்டும். 


2026 தேர்தலிலும், வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் ஏற்கனவே உள்ள கூட்டணியே தொடரும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி செய்யாமல் மக்களை அவர், இடத்திற்கு வரவழைத்து உதவி செய்ததை பெரிதாக பார்க்க வேண்டும். விஜய் மட்டுமல்ல அனைத்து மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.