"அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன"- பிரேமலதா

 
premalatha vijayakanth premalatha vijayakanth

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில்  தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Premalatha

இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறார்கள். மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாக சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம்" என்றார்.

பின்னர் பிரேமலதா அளித்த பேட்டியில், "யாருடைய கூட்டணியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணிகள் மாறலாம், தேர்தல் நேரத்தில் முடிவு தெரியவரும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படியொரு சூழல் வந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் உடன்படுவார்கள். ஏற்கனவே திமுக, அதிமுக இரு கட்சிகளும் தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலிலும் அப்படியொரு சூழல் வரலாம். அப்போது கூட்டணி ஆட்சி அமையும்” என்றார்.இந்த முறை தெளிவாக முடிவெடுப்போம் என நீங்கள் பேசியதற்கு அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அர்த்தமாகுமா? என்ற கேள்விக்கு, "எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள் தான். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட என்னை சந்திக்க வந்துள்ளார்" என குறிப்பிட்டார்.

கூட்டத்திற்கு பின்னர் பிரேமலதாவை சந்திக்க வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மண்டபத்தில் உள்ள தனி அறையில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்தார். தொண்டர்களுடன் பிரேமலதா புகைப்படம் எடுக்கும் நிகழ்வு முடிந்த பின்னர் மேடையிலேயே வைத்து உதயகுமாரை சந்தித்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படத்திற்கு உதயகுமார் மரியாதை செய்தார். சந்திப்புக்கு பின் உதயகுமார் அளித்த பேட்டியில், "பிரேமலதாவின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்தேன். கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார்" என்றார்.