பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் மக்களுக்கு விரைந்து நிவாரன உதவி வழங்க வேண்டும் - பிரேமலதா வலியுறுத்தல்!

 
premalatha

எண்ணூர் கடலில் படித்துள்ள எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள மீனவ மக்களுக்கு விரைந்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயல் தாக்கத்தின் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை மணலி தொழிற்பேட்டையில் உள்ள சிபிசிஎல் பெட்ரோலிய நிறுவனத்தில் அதிகப்படியாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய் கசிந்து பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. எண்ணூர், எர்ணாவூர், தாழக்குப்பம், நெடுங்குப்பம், காட்டுக்குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் எண்ணெய் படலம் பரவி கடலில் சேர்ந்தது. சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு எண்ணெய் படர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் உள்ள அனைத்து பொருட்களிலும் எண்ணெய் படலம் படர்ந்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள், மோட்டார்கள், மீன் வலைகள் தடிமனான எண்ணெய் படலத்தால் பாழாகியுள்ளன. சுமார் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

premalatha vijayakanth

இதனால் 8 மீனவ குப்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் எண்ணெய் படிந்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக துர்நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. அப்பகுதி முழுவதும் மாசடைந்துள்ளதால் அங்குள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. முகத்துவார பகுதியில் படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகள் 3 அடி ஆழம் வரை தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அடுத்து 8 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உதவியுடன் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் கடல் மற்றும் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மும்பையை சேர்ந்த சீ கேர் மரைன் சர்வீசஸ்' என்ற நிறுவனமும், எண்ணெய் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவு அகற்றும் பணி ஒரு மாதம் நீடிக்கும் என சொல்லப்படும் நிலையில, அதுவரை அப்பகுதி மீனவர்களின் நிலைமை என்னவாகும்? எனவே எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை மத்திய மாநில அரசுகள் விரைந்து செய்து தர வேண்டும். மேலும் சேதமடைந்த படகுகளை சரி செய்யவும் நிவாரணம் வழங்க வேண்டும். 

எண்ணெய் கழிவை கடலில் வெளியேற்றிய சிபிசிஎல் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நான் ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதி மீனவர்கள் என்னை சந்தித்து கடலில் கலந்துள்ள என்னை படலத்தை விரைந்து அகற்றவும், தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட உரிய நிவாரண உதவியை மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர்களும் செய்து தருவதாக உறுதியளித்தனர். 


 தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே பெயரளவிற்கு ஆய்வு செய்தனர். ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் இதுவரை சம்பவ இடத்திற்கு செல்லாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட போதும், தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள நிலையிலும், அப்பகுதி மீனவ மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு, தேர்தலுக்குப் பின்பு ஒரு நிலைப்பாடு. இதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி. இனிமேலாவது இது போன்று இல்லாமல் மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும். எனவே எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மீனவர்களின் கஷ்டங்களை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனிடையே மீனவ குப்பத்தை சேர்ந்த 600 பெண்களுக்கு, புயல் நிவாரண நிதி 6000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பாரபட்சமில்லாமல் சரிசமமாக நிவாரண நிதி வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.