”பெண்கள் பாதுகாப்பு குறித்து நான் சொன்னது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது”- பரப்புரையில் பிரேமலதா ஆவேசத்துடன் விளக்கம்
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து திருநகர் பகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றம் என்றாலே முருகனின் ஸ்தலம். இந்த மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி மக்கள், விரும்பும் போற்றும் கூட்டணி. அண்ணன் ஸ்டாலின் இந்த கூட்டணியை மிகச் சிறப்பாக கட்டமைத்து உறுதி செய்துள்ளார். மதுரையின் மருமகளாக உங்கள் வீட்டுப் பெண்ணாக இந்த திருப்பரங்குன்றத்தில் தான் கேப்டன் கட்சி ஆரம்பித்தார். ரெண்டு மருமகளும் சேர்ந்து வந்திருக்கிறோம். மதுரைக்கு இரண்டு மகள்களாக வந்து உங்கள் அனைவருக்காகவும் உழைப்பதற்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறோம். வேட்பாளர் பொறியாளர் பட்டம் பெற்றவர். இதில் ஐடி நிறுவனம் நடத்தி 500 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் என்றால் இந்த தொகுதியை எப்படி பார்த்துக் கொள்வார் என்று நீங்கள் பாருங்கள். மருத்துவ முகாம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இருக்கிறார். வேட்பாளர் வெற்றி பெற்று நிச்சயமாக இங்கு மதுரை மல்லி நறுமண தொழிற்சாலை கொண்டுவரப்படும்.
எய்ம்ஸ் விரைவில் கொண்டு வரப்படும். ஏற்கனவே தம்பி உதயநிதி எடுத்துச் சென்ற செங்கல் தமிழக முழுவதும் பேசு பொருளானது. இப்போது எய்ம்ஸ் இன்னும் முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று நமது வேட்பாளர் நிச்சயமாக எய்ம்ஸ் கொண்டு வர முயற்சி செய்வார். அண்ணாமலை மெட்ரோ கொண்டு வருவோம் என்று சொன்னார் ஆனால் வரவில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றி பேசுகிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்வோம் என்று யாரும் பேசவில்லை. நிச்சயமாக தீபமும் ஏற்றப்படும் மக்களின் வாழ்வும் உயரும். கிருத்திகா தங்கபாண்டி மக்களின் வாழ்வில் தீபம் ஏற்றுவார், ஒளி ஏற்றுவார். நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறேன் விருதுநகரில் விஜய பிரபாகரன், மணிமாறன் என தொடர்ந்து வருகிறேன். அண்ணன் ஸ்டாலின் பெண்களுக்கு நிறைய திட்டங்களை அறிவித்துள்ளார். இறுதியாக திமுகவின் தேர்தல் அறிக்கைகளை விளக்கி சொல்லி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டிக்கு வாக்கு சேகரித்தார்.
சில பத்திரிகைகளில் வந்த செய்தி தவறானவை அண்ணன் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக போவது உறுதி ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்க போவது உறுதி. அப்படி இருக்கும்போது பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வார் என்று கூறினேன் . ஆனால் நான் சொன்னதை திரித்துக் கூறிவிட்டார்கள். ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாவலர் அண்ணன் ஸ்டாலின் தான். அண்ணனிடம் நாங்கள் சொல்வோம் என்று தான் சொன்னேன். ஆயிரம் கைக்கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது” எனக் கூறினார்.


