முதலமைச்சர் அனுப்பிய புகார் கடிதம் - உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப ஜனாதிபதி முடிவு

 
draupadi murmu

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து 15 பக்க கடிதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்த நிலையில், அந்த கடிதத்தை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. மீது புகார் தெரிவித்து 15 பக்க கடிதங்களை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். அந்த கடித்தத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதேபோல், உடல்நலக்குறைவால் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை திடீரென அமைச்சரவையில் இருந்து நீக்கியதோடு, திடீரென நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதேபோல் சனாதனம் குறித்த சர்ச்சை கருத்துகளை பேசி தமிழக மக்களை குழப்பி வருகிறார். எனவே அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

stalin

இந்த கடிதம் தற்போது குடியரசு தலைவர் மாளிகையில் அவரது செயலாளர் வசம் குடியரசு தலைவரின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை ஜனாதிபதி முழுமையாக படித்து பார்த்து விட்டு அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார். இன்று அல்லது நாளை அந்த கடிதம் உள்துறை அமைச்சகத்தில் உள்ள ஆளுநரின் செயல்பாடுகளை கவனிக்கும் அதிகாரிக்கு சென்றடையும். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு அந்த கடிதத்தை கொண்டு சென்று அதிகாரிகள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.