மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்

 
president

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 
 
குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் திரௌபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். 2 நாள் பயணமாக அவர் தமிழகத்திற்கு வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து அவர், மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கோவில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அவரை சாமி தரிசனம் செய்ய வைத்தனர். 

president

இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனி விமானத்தில் மாலை 3.10 மணியளவில் கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அவர் குண்டுதுளைக்காத பிரத்யேக காரில் புறப்பட்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். இதைத்தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். அங்கு, மாலை 5.45 மணியளவில் தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபாடு செய்கிறார். பின்னர் அவர், இரவு 7.30 மணிக்கு காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு தங்குகிறார்.

president

பின்னர் அவர் நாளை காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். நண்பகல் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமானநிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
 குடியரசு தலைவர் வருகையையொட்டி மதுரை மற்றும் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.