பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டம் - அண்ணாமலை , தமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம்!!

 
Modi campaign Modi campaign

4 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

Modi
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக கூட்டணியில், பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில்  தமிழகத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.

modi

ஏப்ரல் 9ம் தேதி காலை வேலூரில் வாகன பேரணியில் கலந்துகொள்ளும் அவர், மாலை தென்சென்னையில் வாகன பேரணியில் பங்கேற்கிறார். தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக வாகனப் பேரணியாக சென்று பரப்புரை மேற்கொள்கிறார்.

modi

ஏப்ரல் 10ம் தேதி நீலகிரியில் வாகன பேரணியும், கோவையில் பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார். அதேபோல் ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.  14ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.