நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 04-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற மக்களவைத் தோ்தலுக்காக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி சென்னை வருகை தரவுள்ளார். அதன்படி, நாளை (ஏப்ரல் 9-ம் தேதி) மாலை 4 மணியளவில் மகாராஷ்டிரத்தின் கோண்டியாவில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமர், மாலை 4.10 மணிக்கு சென்னைக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஆளுநா் மாளிகை அமைந்துள்ள கிண்டி வரை மக்களைச் சந்தித்தவாறு பிரதமர் செல்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பாண்டி பஜார் சாலையில் செய்யப்ட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார்.
இதற்கிடையே பிரதமரின் வருகை, சுற்றுப்பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஏற்கெனவே சென்னை, வேலூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோருடன் மத்திய, மாநில அரசின் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனை அடுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


