கைதிகள் பற்கள் பிடுங்கிய விவகாரம் : அறிக்கை சமர்பிக்க குற்றவியல் நீதிபதிக்கு உத்தரவு..
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு, குற்றவியல் நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்ற வழக்குகளில் சிக்கிய விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த பல்வீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை மேற்கொண்டு வந்தார். பின்னர் நேற்று ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்குகளில் தனது நான்கு பற்கள் உடைக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தன்மீது பதியப்பட்ட வழக்கின் விவரங்கள் என்ன? தன்னை சிறைக்கு அனுப்பும் போது காயங்கள் குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா? மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அதன் விவரங்களை தர கோரி அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். அதனை விசாரணை செய்த குற்றவியல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், தங்களது வழக்கு விவரங்களை தர முடியாது என நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தன்மீது பதியப்பட்ட முழு விவரங்களையும் வழங்க வேண்டும்” என்று கேட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பொதுநல சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் ஆஜராகி இந்த வழக்கில் அருண் மீது பதியப்பட்ட இந்த வழக்கின் விவரங்களை கேட்பது அவரின் உரிமை என்றும், ஆனால் விவரங்களை தர மறுப்பது சட்ட விரோதம் என்றும் வாதிட்டார். இதனை பதிவு செய்து தான் நீதிபதி இளங்கோவன், அருண்குமார் கொடுக்கப்பட்ட மனு மீது குற்றவியல் நீதிபதி என்ன நடவடிக்கை எடுத்தார், அவர் மனு நிராகரிக்கப்பட்டதா? இல்லை ஏதேனும் வழக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்த விரிவான விளக்க அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என குற்றவியல் நீதிபதிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.