கோவையில் தனியார் பள்ளி நடப்பாண்டுடன் மூடப்படுவதாக அறிவிப்பு- மாணவர்கள் சாலை மறியல்
கோவையில் இயங்கி வரும் YWCA பள்ளியை மூடப் போவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து மாணவர்களும் பெற்றவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கோவை அவிநாசி சாலை வ உ சி மைதானம் எதிரே YWCA என்ற அறக்கட்டளையின் கீழ் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து செயல்பட்டு வந்த இந்த பள்ளியில் அப்போதைய காலகட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பயின்று வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தற்போது சுமார் 180 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர். அதே சமயம் அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளியின் மொத்த இடத்தில் மூன்று சென்ட் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக காரணங்கள் மற்றும் கட்டுமான சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் பள்ளியை மூடுவதாக பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் மூன்று தினங்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையானது நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று பள்ளியின் முன்பு மாணவர்களும் பெற்றோர்களும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் பள்ளியை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


