CUET தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்.. தீர்வு காண மாணவர்கள் கோரிக்கை..

 
 CUET தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்.. தீர்வு காண மாணவர்கள் கோரிக்கை..

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது  மாணவர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கான CUET-UG நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.  தேர்வெழுதும் மாணவர்கள்  மார்ச் 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  கியூட் தேர்வானது,  ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது  உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படிகிறது.  தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் பாடத் தேர்வுகளைப் பொறுத்து 3 வேளைகளில்  நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entrance Exam

இதனிடையே,  தமிழக மாணவர்கள் கியூட்  நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.   CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள்  கட்டாயமாகும்.  ஆனால்,  2021ல் கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு  மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை.  இதனால் கியூட்  தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.  

முன்னதாக இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய தீர்வுக் காணப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை தீர்வு காணப்படாதது மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  மார்ச் 12ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால் ,  தமிழ்நாடு அரசு தலையிட்டு 10ம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவிடுவதில் இருந்து  விலக்கு பெற்றுத் தர வேண்டும் என  மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.