விஜய்யின் கொடிக்கு வந்த சிக்கல் - பி.எஸ்.பி. எதிர்ப்பு

 
விஜயின் கொடிக்கு வந்த சிக்கல் - பி.எஸ்.பி. எதிர்ப்பு

தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என த.வெ.க கட்சித் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.  பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில்  இன்று காலை  9.25 மணிக்கு  கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார்.  இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது.  


இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை சட்டப்படி பயன்படுத்த முடியாது, யானை சின்னம் பயன்படுத்தியது தொடர்பாக பிஎஸ்பி தலைமையுடன் பேசிவருகிறோம், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும், இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்  என பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.