பாஜக அலுவலகம் முன் மாட்டிறைச்சி வீசி போராட்டம்- 5 பேர் கைது
கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீசி போராட்டம் நடத்த முயன்ற ஆதி தமிழர் கட்சியினர் 5 பேர் குண்டுகட்டாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை உடையம் பாளையத்தில் மாட்டு இறைச்சி கடை வைத்திருந்த ஆபிதா - ரவி தம்பதியை மிரட்டியதாக பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர் மீது துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் பாஜக பிரமுகர் சுப்பிரமணியத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் கோவை பாஜக அலுவலகம் மீது மாட்டுக் கறி வீசப் போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது மாட்டுக் கறி வீச வந்த ஆதித்தமிழர் கட்சியினரை காவல்துறையினர் தடுத்தனர். ஆதி தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சத்யன் தலைமையில் , மாட்டுகறி வீச வந்த ஆதி தமிழர் கட்சியினரை பாஜக அலுவலகத்திற்கு 100 மீட்டர் முன்னதாக காவல் துறையினர் தடுத்தனர். அப்போது மாட்டுக் கறியை சாலையில் வீசி எறிந்து கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் புகைபடங்களை காலில் போட்டு மிதித்தனர். சாலையில் படுத்து கொண்டு போராட்டம் நடத்திய அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிசென்று கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து 30 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.


