“டங்ஸ்டன் வேண்டாம்”- மதுரையில் கோலங்கள் மூலம் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொங்கல் திருநாளில் வீடுகளுக்கு முன்பு டங்ஸ்டன் வேண்டாம் என வண்ணக் கோலமிட்டு திட்டத்திற்கு எதிராக அப்பகுதி சிறுவர்கள் மற்றும் பெண்கள் கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அரிட்டாபட்டி வல்லாளபட்டி நாயக்கர்பட்டி மீனாட்சிபுரம் எட்டிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமசரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் போராட்டங்கள் நடத்திய நிலையில், கடந்த 10ஆம் தேதி வல்லாளபட்டி கிராமத்திற்கு வந்த பாஜக தலைவர் அண்ணாமலை 17,18,19 ஆகிய தேதிகளில் சென்னை வரும் ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் என இத்திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் தற்போது போராட்ட நிலையில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று பொங்கல் தினத்தன்றும் இன்று மாட்டு பொங்கல் தினத்தன்றும் தங்கள் இல்லங்கள் முன்பு டங்ஸ்டன் வேண்டாம் என வண்ணக் கோலங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி பொதுமக்கள் பொங்கலிட்ட பின்னர் டங்ஸ்டன் வேண்டாம் என கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


