அதிமுகவின் 52வது தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு

 
admk

அதிமுகவின் 52வது தொடக்க விழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 17, 18 மற்றும் 26, 28 ஆகிய 4 நாட்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

admk office

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் 2023, அக்டோபர் 17, 18 மற்றும் 26, 28கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' 17.10.2023 செவ்வாய் கிழமையன்று 52-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2023, 18.10.2023, 26.10.2023, 28.10.2023 ஆகிய நான்கு நாட்கள் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

eps

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.