புதுச்சேரி பந்த் : வாகனங்கள் இயங்காததால் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் அவதி..!
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இடையே மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் கடந்த ஜூன் 16ம் தேதி மீண்டும் முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போதே, விநாயகர் சதுர்த்திக்கு பிறகு 18ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
அதன்படி புதுச்சேரியில் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. பந்த் காரணமாக தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் ஆகியவை இயங்காத நிலையில், திரையரங்குகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் அனைத்து கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் ,தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும் பந்த் காரணமாக புதுச்சேரியில் இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாததால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் தங்களது இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வாகனங்கள் இயங்காததால் தொழிலாளர்கள், பணிக்குச் செல்வோர், கல்லூரி மாணவர்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் - புதுச்சேரி இடையே அரசு பேருந்துகள் குறைந்த அளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கபட்டு வருகின்றன. மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.