ரூ.13.36 கோடி வேளாண் கடன்கள் தள்ளுபடி - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..

 
Rangaswamy


புதுச்சேரியில்  ரூ.13.36 கோடி வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக சுதந்திர தின உரையில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். 

78வது சுதந்திர தினத்தையொட்டி நாடு  முழுவதும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காந்தி திடலில்  தேசியக்கொடியை ஏற்றி வைத்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், சுதந்திர தின உரையை ஆற்றினார். 

அவர் தனது உரையில், “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, தன்னுடைய ஜனநாயகத் தன்மையை எப்படித் தக்க வைத்துக் கொள்ளும், வளர்ந்த நாடாக எப்படி உருவெடுக்கும் என்று பல சர்வதேச தலைவர்களும் வல்லுநர்களும் ஐயம் கொண்டிருந்தனர். ஆனால், நமது தேசத்தின் கடந்த 77 ஆண்டுக் கால பயணத்தைத் திருப்பி பார்த்தோமேயானால் வளர்ச்சிப் பாதையில் கணிசமான தொலைவு பயணித்திருக்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்ள முடியும் . 

இந்தியா ஒரு தொன்மையான தேசம். பல பாரம்பரிய விழுமியங்களால் அழகுக் கூட்டப்பட்டிருக்கும் உயிர் உடைய இதன் மக்களாட்சி முறையின் அற்புதமான வெற்றியை உலகம் மரியாதையோடு பார்க்கிறது. உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக, வளமான நாடாக உருவாக்குவதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கித் தந்த தலைவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களுக்கு இத்தருணத்தில் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். 

Rangaswamy - puducherry

ஆன்மிகமும், அழகும், ததும்பும் புதுச்சேரி மாநிலம் தனது பெயருக்கு ஏற்ப பல புதுமைகள் கொண்ட மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றில் புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. பிரதமர் மோடி ஆசியோடு எனது அரசு எடுத்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் விளைவாகப் புதுச்சேரி தனிநபர் வருமானம் ரூ. 2,63,068 ஆக உயர்ந்துள்ளது .

பாண்லே நிறுவனத்தில் தற்போது தினசரி தயாரிக்கப்படும் பிரட் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ. 40 லட்சம் திட்ட மதிப்பீட்டில் விரிவாக்கத் திட்டமானது பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி பிராந்தியத்தில் சுமார் ஒரு லட்சம் கிலோ பிரெட்டும், காரைக்காலில் சுமார் 30,500 கிலோ பிரட்டும் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நடப்பாண்டில் திறக்கப்பட்டு தனியார் பங்களிப்புடன் எத்தனால் மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கி மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடிக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு சுமார் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் 2014-க்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கான நல வாரியம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதி உதவியினை அவர்களின் வயதிற்கு ஏற்ப ரூ.4,000 மற்றும் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. விடுபட்ட ஆண்டுகளுக்கான தமிழ் மாமணி, தெலுங்கு ரத்னா, மலையாள ரத்தன விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவல், சிறைச்சாலை , நீதிமன்றம் மற்றும் தடய அறிவியல் துறைகள் இடையே தகவல் பரிமாற்றம் எளிதாக மற்றும் விரைவாக மேற்கொள்ள ரூ.6.29 கோடி செலவில் தற்போதுள்ள இணை செயல்பாடு குற்றவியல் நீதி அமைப்பு வலைத்தளம் ஐசிஜெஎஸ் 2.0 ஆகத் தரம் உயர்த்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.