முதல்வரின் காரை வழிமறித்த நபர்... "யாருக்கு ஓட்டு போட்டியோ அவங்களிடம் சென்று கேள்" என வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ
"ஓட்டு எனக்கா போட்டாய்"- யாருக்கு ஓட்டு போட்டீங்களோ அங்கே போய் கேளுங்க...! என்று முதல்வர் ரங்கசாமி காரை நிறுத்தி, குறைகளை சொன்னோரிடம் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி காந்தன் கோபமாக வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதியில் நரம்பையில் நடந்த பூமிபூஜையில் முதல்வர் ரங்கசாமி இன்று கலந்து கொண்டார். அங்கிருந்து புறப்பட காரில் ஏறி அமர்ந்தபோது, பொதுமக்கள் காரை வழி மறித்து முதல்வரிடம் பஸ் வசதி இல்லை என குறைகளை தெரிவித்தனர். அப்போது அருகில் இருந்து தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி காந்தன் உடனடியாக, “ஓட்டு எனக்கா போட்டீங்க. யாருக்கு ஓட்டு போட்டீங்களோ.. அங்கே போய் கேளுங்க” என்று கோபமாக கூறினார். இதையடுத்து குறைகளை குறிப்பிட்டோருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கேட்டு, காரில் அமர்ந்திருந்த முதல்வர் ரங்கசாமி அமைதியாக இருக்க, எம்எல்ஏ தொடர்ந்து அங்கிருந்தோரை திட்டத்தொடங்கினார்.
பின்னர் பாதுகாப்பு அதிகாரி, மக்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். அதையடுத்து முதல்வரிடம் எம்எல்ஏ விளக்கம் தந்தார். எனினும் தனது முன்பாக மக்களிடம் வாக்குவாதத்தில் எம்எல்ஏ ஈடுபடுத்தியது முதல்வரையும், அங்கிருந்தோரையும் முகம் சுளிக்க வைத்தது.


