புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி; வெளி மாநில மக்களுக்கு அனுமதி இல்லை

 
விஜய் விஜய்

புதுச்சேரியில்  நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் 1000ம் போலீசார் ஈடுபட இருப்பதாக சீனியர் எஸ்பி கலைவாணன் பேட்டி அளித்தார். எல்லையில் 17 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள போலீசார் பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தவெக பொதுக்கூட்டம் தொடர்பாக சீனியர் எஸ்பி கலைவாணன் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “புதுவை ரோடுகள் குறுகியதாக உள்ளதால் ரோடு ஷோவுக்கு அனுமதி தராமல், தவெக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தவெக சார்பில் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தவெக சார்பில் 5 ஆயிரம் பேருக்கு கியூஆர்கோடுடன் பாஸ் வழங்கப்படுகிறது.  புதுவையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட வெளிமாநிலத்தினர் புதுவைக்கு வர வேண்டாம். பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது. 3 இடத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. புதுவை மாநில எல்லையில் 17 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள போலீசார் பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்புவார்கள்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பாதிக்காத வகையில்தான் நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் போக்குவரத்து, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மொத்தம் ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாஸ் உள்ள 5 ஆயிரம் பேர் மட்டும் வர வேண்டும். காவல்துறை அறிவுறுத்தல்களை பின்பற்றி பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். தொண்டர்களுக்கு குடிநீர், ஆம்புலன்ஸ், கழிவறை, தீயணைப்பு வண்டிகள் வசதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.