ஊரில் யாருக்குமே அம்மை நோய் வராது! விநோத ‘கொப்பி பொங்கல்’

 
ச் ச்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பல தலைமுறைகளுக்கு முன்பாக இறந்த சிறுமியின் நினைவாக ஒரு கிராம மக்கள் கொப்பி என்ற விநோத பொங்கல் விழா நடத்தி வழிபாட்டில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே அமைந்துள்ளது செரியலூர் கிராமம். இந்த கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொப்பியம்மாள் என்ற சிறுமி அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அந்த சிறுமியின் உடல் அக்கிராமத்தின் எல்லையிலுள்ள தீர்த்தானிக்கரை குளக்கரையில் புதைக்கப்பட்டதாகவும், அதன்பின் அந்த கிராமத்தில் யாரும் அம்மை நோயால் உயிர் இழக்கக் கூடாது என்பதற்காக அந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக தொன்றுதொட்டு ஒரு வினோத பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

ஆண்டுதோறும் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கலன்று உயிரிழந்த கொப்பியம்மாள்  நினைவாக செரியலூர் கிராம மக்கள் கொப்பி என்ற வினோத பொங்கல் எடுப்பது காலங்காலமாய் நடந்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் செரியலூர் மற்றும் கறம்பகாடு கிராம மக்கள் கொப்பியம்மாள் நினைவாக வீட்டில் பொங்கல் வைத்து அதில் பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட கிராம மக்கள் கொப்பியம்மாள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தீர்த்தானிக்கரை குளத்தினுள் பொங்கல் உள்ளிட்ட பொருட்களை ஒன்றாக படையலிட்டு கூட்டு வழிபாடு செய்தனர். இவ்வாறு ஆண்டுதோறும் பொங்கலுக்கு மறுநாள் வழிபாடு செய்வதன் மூலம் தங்கள் கிராமத்தில் யாருக்கும் அம்மை நோய் வராது என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.