“உயிர் தான் இல்ல, அவன் உடம்பயாச்சும் கொடுத்துடுங்க”- சிங்கப்பூரில் மின்னல் தாக்கி பலியான இளைஞரின் குடும்பத்தினர் கதறல்
சிங்கப்பூரில் மின்னல் தாக்கி புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சேர்வகாரன்பட்டியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞரின் உயிரிழப்பால் இளைஞரின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் மட்டுமின்றி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் உடலை மீட்டு தாயகம் கொண்டுவரவும் இளைஞரின் குடும்பத்திற்கு போதிய உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு சேர்வகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு வினிதா என்ற மகளும் செந்தூரன்(25) என்ற மகனும் உள்ளனர். வினிதா செவிலியர் படிப்பை முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் கடந்த மூன்று ஆண்டு காலமாக செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு திருமணத்திற்காக வரன் பார்ப்பதால் கடந்த ஆறு மாத காலமாக சொந்த ஊரில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் செந்தூரன்(25) ஐடிஐ படித்துள்ள நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு குடும்ப வறுமையை போக்க சிங்கப்பூருக்கு எலக்ட்ரிஷன் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான் சிங்கப்பூரில் உள்ள புகிட்படாக்(Bukit Batok) பகுதியில் நேற்று மாலை செந்தூரன் பணிபுரிந்த போது திடீரென்று மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் உயிரிழந்த தகவலை உடன் பணிபுரிந்தவர்கள் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன செந்துரன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்வதறியாமல் தவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். மேலும் இளைஞர் செந்தூரன் சிங்கப்பூரில் உயிரிழந்த சம்பவம் அவரது கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் செந்தூரனின் தந்தையான மதியழகன் கடந்த 15 தினங்களுக்கு முன்புதான் குடல் அறுவை சிகிச்சை செய்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் நேற்று காலையில் தான் செந்தூரன் அவரது தந்தையிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்ததாகவும் குடும்ப வறுமையை போக்கவே செந்தூரன் சிங்கப்பூருக்கு பணிக்கு சென்றதாகவும் அதே போல் கடந்த மூன்று ஆண்டு காலமாக அவரது சகோதரி வினிதா செவிலியராக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது சகோதரனை நான் பார்க்கவே இல்லை என்றும் தற்போது தனக்கு திருமணத்திற்கு வரன் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில் கடைசிவரை தனது சகோதரனை பார்க்கவே முடியாமல் சென்று விட்டது என வேதனை தெரிவிக்கிறார்.

மேலும் சிங்கப்பூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞர் செந்தூரன் உடலை மீட்டுக் தாயகம் கொண்டு வர தமிழ்நாடு அரசும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான மெய்யநாதன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதோடு இளைஞரின் குடும்பத்தினருக்கு போதிய உதவிகளை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


