சட்டமன்ற தேர்தலில் நானும், ராதிகாவும் போட்டியிட போவதில்லை - சரத்குமார்..!
பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை வந்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ”வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் என்னுடன் பயணிக்கும் சகோதரர்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவேன். தேர்தலில் போட்டியிடாதது எனது விருப்பம். நான் சுயநலமாக சிந்திக்கவில்லை, உடன் பயணிப்பவர்கள் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். எனது கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்பேன்.
பாஜக மதவாத கட்சி என்று திமுக பிரச்சாரம் செய்கிறது. ஆனால் சிறுபான்மையினர் நலனுக்காக, அவர்களை பாதுகாக்க திமுக என்ன செய்துள்ளது?" என சரத்குமார் கேள்வியெழுப்பினார். அப்போது, காஷ்மீர், மணிப்பூர் பிரச்சனையின் போது பிரதமர் நேரில் செல்லாதது ஏன்? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “காஷ்மீரில் நடந்த பிரச்சினைக்கு பிரதமர் செல்ல வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த போது ஏன் நேரில் செல்லவில்லை என விஜய்யிடம் நீங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்” என்றார்.
திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, ”அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதை பார்த்து அவர் பேசுகிறார்” என சரத்குமார் பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட நிருபர், சரத்குமார் கட்சி ஆரம்பிக்கும் போது பெரிய கூட்டம் வந்தது. அதேபோன்றுதான் விஜய்க்கும் கூட்டம் வருகிறதா? எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ”என்னையும், விஜய்யையும் ஒப்பிடாதீர்கள். 28 ஆண்டுகள் எனக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. எம்.பி., எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளேன். ரஜினி, அஜித் எங்கு சென்றாலும் கூட கூட்டம் வரும். ஆனால் அக்கூட்டம் வாக்குகளாக மாறுமா என்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்" என பதிலளித்தார்.
ராதிகா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, ”நானே போட்டியிடவில்லை, அவர் எப்படி போட்டியிடுவார்?” என சரத்குமார் பதில் கேள்வி எழுப்பினார்.


