“அந்த மனசுதான் சார் கடவுள்”- கரையானால் கலங்கி நின்ற தம்பதிக்கு ரூ.1 லட்சம் கொடுத்த ராகவா லாரன்ஸ்!
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியில் சிறுக சிறுக சேர்த்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை கரையான் அரித்ததால் கூலி தொழிலாளியின் குடும்பம் செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில் அவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியை சேர்ந்தவர் முத்துகருப்பு ( 30). கணவர் குமார் (35, ) இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். அன்றாடம் கணவருடன் கூலி வேலைக்கு சென்று ஆடுகள் வளர்த்து அதில் கிடைக்கும் பணத்தை செலவு போக 500 ரூபாய் தாளாக மாற்றி தகர உண்டியலில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்து வந்துள்ளார். கூரை வீடு என்பதால் பாதுகாப்பிற்காக யாருக்கும் தெரியாமல் வீட்டினுள் குழி தோண்டி தகர உண்டியலை புதைத்து வைத்துள்ளார். மகள் காதணி விழாவிற்காக சிறுக சிறுக சேமித்து வைத்ததுடன் இரு மாதங்களுக்கு முன் வெளியில் எடுத்து எண்ணும் போது ஒரு லட்ச ரூபாய் வரை இருந்துள்ளது. இன்னமும் சேமிக்க வேண்டும் என எண்ணி இரு மாதங்களுக்கு பின் இன்று காலை தகர உண்டியலை தோண்டி எடுத்துள்ளார். சமீபத்தில் பெய்த மழை காரணமாக தகரத்தை கரையான் அரித்து உள்ளே இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை அரித்தது. கரையான் அரித்ததை கண்டு குடும்பமே கண்ணீர் விட்டு கதறி அழுதது.

சேமிப்பை கரையானுக்கு பறி கொடுத்து விட்டு தவிக்கும் தன் குடும்பத்திற்கு நல் உள்ளம் கொண்டோர் உதவ வேண்டும் என முத்துகருப்பு கோரிக்கை விடுத்த நிலையில், குழந்தைகளின் காதணி விழாவிற்காக குமார்- முத்துகருப்பு தம்பதியை அழைத்த நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.


