கலைஞர் நினைவு நாணயம் வெளியீடு- ராகுல்காந்தி வாழ்த்து
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று (18.8.2024) நடைபெறவுள்ளதையொட்டி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டில், தமிழ்நாட்டு மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது வியத்தகு வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சமூகரீதியான முற்போக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழி வகுத்தது என்றும். அவரது உறுதியான தலைமையின் கீழ், தமிழ்நாடு ஒரு திடமான இலட்சியப் பாதையில் சென்றுள்ளது என்றும், அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியதாகவும், பல மாநிலங்கள் பெரிய கனவுகள் காண ஊக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் பாராட்ட விரும்புவதாகவும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதில் அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பாராட்டுவதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Sincere thanks, dear brother Thiru. @RahulGandhi, for your warm wishes on the significance of Muthamizh Arignar Kalaignar Commemorative Coin release ceremony. Let us continue to work together to fulfill his dreams!#KalaignarForever pic.twitter.com/TcijyldpFK
— M.K.Stalin (@mkstalin) August 18, 2024
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி மாண்புமிகு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாணய வெளியீட்டு விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, வாழ்த்துகளைத் தெரிவித்த சகோதரர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றி! தலைவர் கலைஞரின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து ஒன்றிணைந்து பாடுபடுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.