ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமைக்கு எதிரான வழக்கு - அக்.24க்கு ஒத்திவைப்பு..
ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனு அக்டோபர் மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.விக்னேஷ் என்பவர், ராகுல் காந்தியின் குடியுரிமைக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை கடந்த 12ம் தேதி தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் எனவும், இந்திய குடியுரிமை இல்லாத காரணத்தினால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை எனவும் தெரிவித்து இருந்தார். ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதற்கான ஆதாரங்கள் இங்கிலாந்து அரசிடம் உள்ள நிலையில், இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டு வேண்டும் என்றும், மேலும் இங்கிலாந்து அரசிடம் இருந்து ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான தகவல்களை பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
ராகுல் காந்தி ரேபரேலி மக்களவை உறுப்பினர் என வழங்கப்பட்ட தேர்தல் ஆணையர் சான்றிதழை ரத்து செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உத்தரபிரதேச தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்து இருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் , ஓம் பிரகாஷ் சுக்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு கடந்த 25ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சரத்திற்கு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறிப்பிட்ட கடிதம் மீது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டை கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபட்டது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அறிக்கை பெற்று தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனையேற்ற நீதிமன்றம் அக்டோபர் 24ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாகவும் அதற்குள், உள்துறை அமைச்சரிடம் இருந்து அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.