வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சென்னை மக்கள்...

 
source image

சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 100 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரே மாதத்தில் இவ்வளவு மழை பெய்திருப்பது இதுவே 4 வது முறை என  கூறப்படுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

1

ஏற்கனவே பெய்த மழையை வெள்ள பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  மீண்டு வரும் சூழலில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ஏற்கெனவே பெய்த மழையின் போது வெள்ளக்காடாய் காட்சியளித்த கே. கே.நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று தான், தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் ராஜமன்னார் சாலையில் சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு இடுப்பளவிற்கு மழை வெள்ளம் தேங்கி உள்ளது. அதோடு நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.  

2

இதேபோல் விருகம்பாக்கம், சுப்பிரமணியம் தெருவில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள சுப்பிரமணியம் நகர், கௌடா சாலை, போஸ்டல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.  திருவொற்றியூர் ராஜாஜி நகர், கலைஞர் நகர், கார்கில் நகர், உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

3
ஆவடி குடிசை மாற்று வாரியம், திருமுல்லைவாயல் மற்றும் திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

4