வெளுத்து வாங்க போகுது மழை! சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

 
rain

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனிடையே சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல்,  சூறைக்காற்றுடன் பெய்த  கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.  மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

rain

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.