"பசுந்தேயிலையின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்குக" - ஈபிஎஸ்

 
eps

நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலைத் தோட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான பசுந்தேயிலையின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் என்று  ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பசுந்தேயிலையை நம்பியே உள்ளது. தொடர்ந்து பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.2000-மாவது ஆண்டில், பசுந்தேயிலையின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அப்போது, சுமார் 35 ஆயிரம் சிறு, குறு தேயிலைத் தோட்ட விவசாயிகள் தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு பலரைக் கைது செய்தது; வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

EPS

2001-ல் ஆட்சிக்கு வந்த மாண்புமிகு அம்மா அவர்கள், தேயிலைத் தோட்ட விவசாயிகள் பலர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றதுடன், சிறு, குறு தேயிலைத் தோட்ட விவசாயிகள் உற்பத்தி செய்யும், ஒரு கிலோ தேயிலைக்கு 2 ரூபாய் மானியமாக வழங்கி சிறு, குறு தேயிலைத் தோட்ட விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். மேலும், நலிந்து வந்த தேயிலைத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட 2001-2006 ஆண்டுவரை தமிழ் நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 100 கிராம் தேயிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் திட்டத்தைத் துவக்கி, தேயிலை தொழிலுக்கு உயிரூட்டினார்கள். இதனால், சுமார் 50 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பலனடைந்தார்கள். மேலும், இடைத்தரகர்கள் தொந்தரவின்றி, தேயிலை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக தேயிலையை வாங்குவதற்கும், விற்பதற்கும் டி.சர்வ் என்ற ஆன்லைன் விற்பனையை, மாண்புமிகு அம்மா அவர்கள் 2003-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்கள்.மாண்புமிகு அம்மா அவர்கள் 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு, விலை வீழ்ச்சி ஏற்படும்போதெல்லாம், கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதல் விலையாக வழங்குவதற்கு உத்தரவிட்டார்கள். இப்படி, மாண்புமிகு அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தேயிலை விவசாயிகளின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தது.

eps

இந்நிலையில், பல ஆண்டுகள் கடந்த பின்னும், உற்பத்திச் செலவு பலமடங்கு அதிகரித்த நிலையில், தற்போது 1 கிலோ பசுந்தேயிலையின் விலை ரூ. 12/- வரை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், பசுந்தேயிலைக்கான உண்மையான உற்பத்தி செலவு குறித்த தோட்டக் கலைத் துறையின் பரிந்துரைகள் மற்றும் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின், விவசாய விளை பொருட்களுக்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, பசுந்தேயிலைக்கு யதார்த்தமான குறைந்தபட்ச ஆதார விலையை, அதாவது 1 கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 33.50/-ஐ நிர்ணயம் செய்திட, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாக்குபெட்டா படுகர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 1.9.2023 முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

EPS

எனவே, தற்போது பசுந்தேயிலையின் விலை மிகவும் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் பிரதிநிதிகளை விடியா திமுக அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, உடனடித் தீர்வாக அம்மா அரசு வழங்கியது போல், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ. 10/- மானியமாக வழங்கிட வேண்டும் என்றும்; மேலும், அவர்களது கோரிக்கையான பசுந்தேயிலை ஒரு கிலோவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 33.50-ஐ பெற்றுத் தந்திட, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.