மக்கள் மீது தொடர்ந்து கூடுதல் நிதிச் சுமையை திணிக்கும் திமுக அரசு - ஓபிஎஸ் கண்டனம்!

 
ops

போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியது, பல்கலைக்கழக சான்றிதழ்களுக்கான கட்டண உயர்வு என்ற வரிசையில் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை பல மடங்கு வரை உயர்த்த தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாக வந்துள்ள செய்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பிலிருந்து ஓரளவு விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கையில், ஒருபுறம் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலை  விஷம் போல் உயர்ந்து கொண்டு வருவதும், மறுபுறம் அரசு தன் பங்கிற்கு தொடர்ந்து வரிகளை விதித்துக் கொண்டிருப்பதும் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

erode bus strike

வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும்; இந்த மையத்தின் அங்கீகாரத்தை புதுப்பித்தலுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக, அதாவது ஆறு மடங்கு உயர்த்தவும்; இந்த மையத்தை புதுப்பிப்பதற்கான தாமதக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தவும்; போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரரன மேல்முறையீடு கட்டணம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும்; சி.எப்.எக்ஸ். அறிவிப்பினை திரும்பப் பெறும் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக, கிட்டத்தட்ட 16 மடங்கு உயர்த்தவும்; தற்காலிகப் பதிவு மற்றும் தற்காலிகப் பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தலுக்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக, அதாவது நான்கு மடங்கு உயர்த்தவும்; பிற மண்டல வாகனங்களின் தகுதிச் சான்றுக்கான கட்டணம் ஏதுமில்லாத நிலையில் 500 ரூபாயாக நிர்ணயிக்கவும்; ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கிற்கு மேல் உயர்த்தவும்; தகுதிச்சான்று நகல் பெறுவதற்கான கட்டணம் ஏதுமில்லாத நிலையில் 250 ரூபாயாக நிர்ணயிக்கவும்; மோட்டார் வாகன ஆய்வாளரின் உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டுக் கட்டணம் 40 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக, அதாவது 12 மடங்கிற்கு மேல் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மக்கள் மீது தொடர்ந்து கூடுதல் நிதிச் சுமையை திணிக்கும் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

op

தோட்டத்திலிருந்து மாலை தொடுப்பதற்காக பூவைப் பறிப்பவர், பூச்செடி மறுநாளும் தேவை என்பதன் அடிப்படையில், எப்படி செடிக்கு பாதிப்பு ஏற்படாமல் பூவை மட்டும் பறிக்கிறாரோ, அதுபோல் அரசும் மக்கள் சீராக வாழ்ந்தால்தான் வரி கிடைக்கும் என்பதன் அடிப்படையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வரியைப் பெற வேண்டும். ஆனால், இதையெல்லாம் பின்பற்றி இந்த தி.மு.க. அரசு செயல்படுவதாகத் தெரியவில்லை. ஒருபக்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மறுபக்கம் மேலுக்கு மேல் வரிகளை விதித்து மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது. ஓராண்டிற்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒவ்வொரு வீட்டு பட்ஜெட்டிலும் மாதம் 5,000 ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், செலவுக்கேற்ப வருமானம் கூடவில்லை. பல்வேறு இன்னல்களால் துன்பப்பட்டு கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தும் முடிவினை தி.மு.க. அரசு கைவிட வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.