"2026, 2036 ஆண்டும் நாங்கள் தான் என சொல்லும் தி.மு.க. எதிர்க்கட்சியாகவே இருக்கும்"- ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய மாற்றம்தான் நிரந்தரமான மாற்றமாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக பாக( பூத் ) நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. பராசக்திகாலனியில் மொட்டை மாடியில் வைத்து நடந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய மாற்றம்தான் நிரந்தமான மாற்றமாக இருக்கும். அந்த மாற்றத்தை தரக்கூடியவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரவேண்டும் என மக்கள் விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். 2026- சட்டமன்றத் தேர்தல் எப்பொழுது வரும், எப்பொழுது வாக்குச்சாவடிக்கு செல்வோம், வாக்கு இயந்திரத்தில் எப்பொழுது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. திமுகவின் தலைமை பேசும் திமிரான பேச்சை சகித்துக் கொள்ள முடியவில்லை.
2026, 2036, 2046, 2056 - ஆண்டுகளிலும் நாங்கள்தான் என சொல்லும் திமுக எதிர்க்கட்சியாகவே இருக்கும்.எல்லா ஆண்டுகளிலும் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும். அப்போது திமுக எதிர்க்கட்சியாக, எதிர் வரிசையில் அண்ணன் ஸ்டாலின் இருப்பார். மு.க.ஸ்டாலினுக்கு இனி முதல்வராகும் வாய்ப்பே கிடையாது. “வாராரு... வாராரு” என சொன்னார்கள். அதனால் அவருக்கு மக்கள் வாய்ப்பும் கொடுத்தார்கள். வந்த பின்னர் தான் தெரிந்தது அவர் (ஸ்டாலின்) வந்ததில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று. அதே நேரம் அதிமுகவிற்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் சிவகாசி தொகுதியில் நான் போட்டியிடுவேன். வெற்றி பெற்று நிச்சயமாக சிவகாசி தொகுதி மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவேன்.

சிவகாசியில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7- சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று செயின் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வார்கள். 234- தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும், எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் முதலமைச்சராவார்” என்றார்.


