அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கம் - ராஜ்கமல் பிலிம்ஸ் தகவல்
அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சிவகார்த்திகேயம் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. இதனிடையே அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் என் ஒளிபரப்பப்பட்டதாக கூறி இளைஞர் ஒருவர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளார். அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி தோன்று காட்சியில் ஒரு மொபைல் எண் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அந்த நம்பருக்கு சொந்தமான இளைஞர் ஒருவர் பட நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். தனது நம்பர் திரைப்படத்தில் திரையிடப்பட்டதால் அடிக்கடி தனக்கு அழைப்பு வருவதாகவும், இதனால் தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் இழப்பீடு கேட்டார்.
இந்த நிலையில், அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே தொடர் அழைப்புகளால் தனியுரிமை பாதிக்கப்பட்டதற்கு பொது சட்டத்தின் கீழ் மாணவர் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


