பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் - ராஜ்நாத் சிங் பேச்சு

 
rajnath singh rajnath singh

பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்.  காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலால் பல அப்பாவிகளின் உயிர் பறிபோயுள்ளது. இந்த மிருகத்தனமான செயல் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என கூறினார்.