பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய ராமதாஸ், அன்புமணி..
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராமதாஸ், “தந்தை பெரியார் கற்பித்த சமூகநீதியும், சுயமரியாதையும் தான் இன்றையத்தேவைகள். அவற்றை வென்றெடுக்க அவரது 146-ஆம் பிறந்தநாளில் உறுதியேற்றுக் கொள்வோம்!
பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 146-ஆம் பிறந்தநாள் இன்று. சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த நாளில் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது. தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூகநீதியும், சுயமரியாதையும் தான். அவற்றை போதித்தவர் தந்தைப் பெரியார் அவர்கள் தான். அவரது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன் சமூகநீதியையும், சுயமரியாதையையும் வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.