திரைப்படமாகும் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு..!! படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்..
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு திரைப்பட்டத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 87வது பிறந்தாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனது பிறந்தநாளையொட்டி 87 மரக்கன்றுகள் நடும் விழாவை ராமதாஸ் இன்று காலை தொடங்கிவைத்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த படைப்பிற்கு ‘அய்யா’ என பெயரிடப்பட்டுள்ளது. ராமதாஸ் பிறந்தநாளையொட்டி படத்தின் தலைப்பையும், சில போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்கிற கருப்பொருளுடன் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், ராமதாஸ் கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடிக்க இருப்பதாகவும், பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா இந்தப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்களின் அடிப்படையில் ‘அய்யா’ படத்தில் நடிகர் ஆரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.



