திராவிட மாடல் அரசு மக்களுக்கு பெருந்துரோகம் செய்து விட்டது - ராமதாஸ் கண்டனம்!

 
ramadoss ramadoss

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு திமுக அரசே காரணம் என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த  தமிழ்நாடு இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3  ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்தவொரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாததும்,  புதிய மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டும்  அலட்சியம் கண்டிக்கத்தக்கது.2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 11,650 ஆக இருந்தன. அதன்பின் ஓராண்டில் 400 புதிய இடங்கள் மட்டும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தனியார் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டவை.  இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு ஆகும். இதேகாலத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று கூறப்படும் உத்தரப்பிரதேசம் 2522 புதிய இடங்களை உருவாக்கி , தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மராட்டியம் 1000 புதிய இடங்களையும்,  இராஜஸ்தான் 900 புதிய இடங்களையும், தெலுங்கானா 550 இடங்களையும் உருவாக்கியுள்ளன. கடந்த ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில்  தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ramadoss

கடந்த ஆண்டில் கர்நாடகம் 800 புதிய இடங்களை உருவாக்கிய நிலையில் தமிழ்நாட்டில் 1000 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டிருந்தால்,  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்க முடியும்.  தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 50 இடங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இரு ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை செய்திருந்தாலே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்புகளையெல்லாம் இழந்து விட்டு நிற்கிறது தமிழ்நாடு அரசு. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில்  திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை .தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.

 அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறியதன் மூலம் திராவிட மாடல் அரசு மக்களுக்கு பெருந்துரோகம் செய்து விட்டது. இதற்காக திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.