மதுரை ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது - ராமதாஸ் இரங்கல்

 
ramadoss

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தொடர்வண்டி  பெட்டிகளில் இன்று காலை ஏற்பட்ட கொடிய தீ விபத்தில், அதில் பயணம் செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பயணிகள் உயிரிழந்திருப்பதும், மேலும் பலர் காயமடைந்திருப்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சுற்றுலா தொடர்வண்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையும் தான் காரணமாகும். சுற்றுலாத் தொடர்வண்டி உத்தரப்பிரதேசத்திலிருந்து கடந்த 17&ஆம் தேதி புறப்பட்டுள்ளது. நாகர்கோயிலுக்கு நேற்று முன்நாள் வந்த சுற்றுலாத் தொடர்வண்டி, அங்குள்ள தலங்களை பயணிகள் பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. 

ramadoss

அங்கிருந்து நேற்றிரவு புனலூர் & மதுரை தொடர்வண்டியுடன்  சுற்றுலாத் தொடர்வண்டியின் பெட்டிகள் இணைக்கப்பட்டு  இன்று அதிகாலை மதுரைக்கு வந்துள்ளன. மதுரை தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்ட அந்த பெட்டிகளில் இருந்த சிலர், தேநீர் வைப்பதற்காக எரிவாயு உருளைகள் மூலம் அடுப்பை பற்ற வைத்தது தான் தீ விபத்துக்குக் காரணம் என்று முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்திருக்கிறது.தொடர்வண்டிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருளையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு  உள்ளது. அவ்வாறு இருக்கும் போது உத்தரப்பிரதேசத்திலிருந்து சுற்றுலா தொடர்வண்டியில் பயணித்த பயணிகள், தங்களுடன் சிறிய அளவிலான எரிபொருள் உருளையை கொண்டு வந்துள்ளனர். ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்திலும் அதன் மூலம் அவர்கள் உணவை சமைத்து உண்டு வந்துள்ளார். ஆனால்,  எங்கும், எவரும் அதை தடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்திலேயே சமையல் உருளைகளை தொடர்வண்டியில் கொண்டு செல்வதை அதிகாரிகள் தடுத்திருந்தால் இந்த கொடிய விபத்தையும், அதனால் ஏற்பட்ட 9 உயிரிழப்புகளையும் தடுத்திருக்க முடியும். 

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று சில பயணிகளின் பொறுப்பின்மையும், அதிகாரிகளின் அலட்சியமும் தான் விபத்துக்கு காரணமாகும்.தொடர்வண்டி தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற எனது விருப்பத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, தீ விபத்துக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பானவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை தொடர்வண்டித்துறை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.