ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு.. பின்னாடியே சென்ற ஆடிட்டர் குருமூர்த்தி..!! என்ன நடந்தது தைலாபுரம் தோட்டத்தில்??
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இன்று இருவரும் சந்தித்துப் பேசினர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் அண்மைக்காலமாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பொதுவெளியில் அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபடியே ராமதாஸ் இருந்து வருகிறார். கட்சியின் நிறுவனரும் நான்தான், தலைவரும் நான் தான் என பேட்டியளித்து வருகிறார். தனியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்த ராமதாஸ், ஒட்டுமொத்தமாக மாவட்ட நிர்வாகிகளை மாற்றியமைத்தார். அன்புமணி சென்னையில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், மருத்துவர் ராமதாஸ் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இவ்வாறாக பாமக உட்கட்சி பூசல் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை சந்தித்துப் பேசினார் அன்புமணி.

இதனையொட்டி சமாதானம் பேச முயற்சியாக இன்று காலை சரியாக 9 மணி அளவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது இளைய மகள் சஞ்சுத்ரா ஆகியோர் தைலாபுரம் தோட்டம் வந்தடைந்தனர். இருவரும் வீட்டிற்கு உள்ளே சென்ற பின்னர் வீட்டின் மெயின் கதவு மூடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் யாருக்கும் உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் , தாயார் சரஸ்வதி அம்மாள் மற்றும் சஞ்சுத்ரா ஆகியோர் மட்டுமே அமர்ந்து பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டனர்.

பின்னர் ஒரு மணிநேரத்திற்கு பிறகு சரியாக 10.05 மணிக்கு ராமதாஸ் அவர்களின் மூத்த மகள் காந்திமதி தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தார். அவர் வந்த சிறிது நேரத்திலேயே அன்புமணியும், அவரது மகள் சஞ்சுத்ராவும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்கள் அன்புமணி இடம் பேச்சுவார்த்தை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் காரில் இருந்தபடியே கைக்கூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ராமதாஸ் சென்ற சிறிது நேரத்திலேயே ஆடிட்டர் குருமூர்த்தி தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தார். ஆடிட்டர் குருமூர்த்தியும் பாமக நிறுவனர் ராமதாஸும் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க பாஜகவின் ஆதிக்கம் இருப்பதாக அரசியல் நிபுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


