அனைத்து இடங்களிலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள் - ராமதாஸ் அறிவுறுத்தல்

 
ramadoss

உங்கள் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, நீங்கள் பணி செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கற்றறிந்த தமிழறிஞர்கள்கடமை தவறக்கூடாது. அன்னைத் தமிழை அழிவிலிருந்து காக்கவும்,  அதன் வளர்ச்சிக்கு வகை செய்யவும் தொடங்கப்பட்ட  தமிழைத் தேடி இயக்கம் அதன் பணிகளை திறம்பட செய்து வருகிறது. கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுதுவதில் தொடங்கி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பயிற்றுமொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும்  என்பது வரை எண்ணற்ற மாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழைத் தேடி இயக்கம் மேற்கொண்டு வருகிறது.  சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நானும் சென்று தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள், தனித்தமிழ் பதாகைகள் ஆகியவற்றை திறந்து வைத்தும், பரப்புரை மேற்கொண்டும்  வருகிறேன்.இந்த முயற்சியில் தமிழறிஞர்கள் , தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் ஆகியோருக்கு இதில் பெரும் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்பினேன் இப்போதும் விரும்புகிறேன். ஏனென்றால், மற்ற அனைவரையும் விட  தமிழறிஞர்கள் அன்னைத் தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதையும் கடந்து  அவர்கள்  தமிழ்மொழியால் அடையாளம் பெற்றவர்கள். அதற்காக நன்றி செலுத்த வேண்டிய கடமையும்  அவர்களுக்கு உள்ளது.  ஆனால், ஏனோ அவர்களின் பங்களிப்பு மிகவும்  ஏமாற்றமளிக்கிறது.

ramadoss

அன்னைத் தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் ஆகிய நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் மாநாடுகளைக் கூட்டி, அன்னைத் தமிழைக் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும். தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானங்கள் செயல்படுத்தப்படுவதற்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.  ஞாயிற்றுக் கிழமைகளில்  என்னை நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தமிழ் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்தேன்.  ஆனால், எவரிடமிருந்தும் அழைப்பு வரவில்லை.அன்னைத் தமிழைக் காக்க வேண்டியது கற்றறிந்த தமிழறிஞர்களின் கடமை. அந்தக் கடமையிலிருந்து அவர்கள் தவறக் கூடாது. எனவே, மாவட்ட அளவில் குறைந்தது 10 பேர் கொண்ட குழுக்களை அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடி, தமிழ் வளர்ச்சிக்கான பணிகளையும், பரப்புரைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். 

முதற்கட்டமாக தமிழைத் தேடி இயக்கம் வடிவமைத்து வெளியிட்டுள்ள தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகிய பதாகைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, நீங்கள் பணி செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள்.  தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உங்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவ நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.