2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்: வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் கடல்பகுதி..

 
மீனவர்கள் போராட்டம்

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி  இலங்கை கடற்படை , தமிழக மீனவர்களை தாக்கியும், மீனவர்களின்  வலைகளை சேதப்படுத்தியும், படகுகளை சிறைபிடித்தும்  அட்டூழியம் செய்யும் சம்பவங்கள்  தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்ரும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த  68  மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அண்மையில் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

அதற்குள்ளாக பல்வேறு காலக்கட்டங்களில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீஅனவர்களின்  105 படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விடப்போவதாக அறிவித்தது. தங்களது படகுகளை மீட்டுத்தரக்கோரி  மீனவர்கள் மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில்  சொன்னபடி  கடந்த 7 ஆம் தேதி முதல் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு  ஏலம் விட்டு வருகிறது. அதேநேரம்   நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும், அவர்களது 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.  

ராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. ரூ.4 கோடி வருவாய் இழப்பு : இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி!

இதனால் கடும் அதிருப்தி அடைந்த  ராமேஸ்வரம்  மீனவர்கள்,  இலங்கை அரசு கைது செய்துள்ள தமிழக  மீனவர்களையும்  மற்றும் சிறைபிடிக்கப்பட்ட அவர்களது விசைப்படகுகளையும்  மீட்டுத்தர வலியுறுத்தி  நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.  இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றனர்.  இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாததால், ராமேசுவரம் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும்  நாளை  (11-ந்தேதி)  ராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.