இலங்கை கடற்படை கைதுசெய்துள்ள இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்க - வைகோ..

 
vaiko


இலங்கை கடற்படை கைதுசெய்துள்ள இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 19.06.2023 அன்று இராமேஸ்வரம் ஜெட்டி கடற்கரையிலிருந்து 558 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதிச் சீட்டுப் பெற்று, மீன் பிடிக்க கடலில் சென்றது. அப்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் த/பெ.  செபாஸ்டியன் என்பவருக்குச் சொந்தமான IND TN 10 MM075 என்ற விசைப்படகில் பழுது ஏற்பட்டு, நெடுந்தீவு கடற்கரையில் நின்றுவிட்டது.

மீனவர்கள்

அந்தப் படகில் மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து, நெடுந்தீவில் வைத்துள்ளது. அவர்களை இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் நிறுத்தி, அவர்களை சிறையில் தள்ளவும் இலங்கைக் கடற்படை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விசைப்படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரை ஒதுங்கிய படகில் இருந்த மீனவர்களை மனிதநேய அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அந்தோணி ஜான்சன், சேசுராஜ், மரியரூபன், முத்து, அந்தோணி பிரபு, லெனின், ஜேக்கப், ஜேம்ஸ் பிரதீப், அந்தோணி ஆகிய ஒன்பது மீனவர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.