கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு..!
கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். 19-வது வார்டு கவுன்சிலராக இருந்த அவர் உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். ஜூலை 8-ம் தேதி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் நடைபெற்ற சிறப்பு மாமன்றக் கூட்டத்தில் அவரது பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் கோவை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று (ஆக.,06) நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையொட்டி திமுக மேயர் வேட்பாளராக 29வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி, நேற்று அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே அறிவித்தபடி காலை 10.30 மணி முதல் 11 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியாக கோவை மாநகராட்சியின் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., இருந்தார். இதனையடுத்து இன்று காலை 10:30 மணிக்கு தனது வேட்பு மனுவை ரங்கநாயகி தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் முடியும் நேரம் 11 மணி வரையில் வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியில் ஏழாவது மேராகவும், இரண்டாவது பெண் மேயராகவும் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தேர்தலில் வெற்றுபெற்றதற்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார்.


