ரேன்சம்வேர் தாக்குதலால் 300 கூட்டுறவு வங்கி சேவை பாதிப்பு..!

ரேன்சம்வேர் என்பது இணையம் வழியாக கணினிகளில் நுழைந்து அதனை ஹேக் செய்யும் ஒருவகை மால்வேர் ஆகும். ஹேக்கர்கள் இந்த ரேன்சம்வேரை பயன்படுத்தி பெருநிறுவனங்களின் கணினிகளை ஹேக் செய்து அந்த நிறுவனங்களிடம் இருந்து பெரும் தொகையை (ரேன்சம்) கேட்பதால் இந்த வைரஸுக்கு ரேன்சம்வேர் என்று பெயர் வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு ஒரே நாளில் 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியது.
ரேன்சம்வேர் தாக்குதலால், சுமார் 300 சிறிய உள்ளூர் இந்திய வங்கிகளில் பணம் செலுத்தும் முறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது. இந்த தாக்குதல் சிறிய வங்கிகளுக்கு வங்கி தொழில்நுட்ப அமைப்புகளை வழங்கும் C-Edge டெக்னாலஜிஸையும் பாதித்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மென்பொருள், சில்லறை கட்டண முறையை அணுகுவதில் இருந்து தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சி-எட்ஜ் மூலம் சேவை பெறும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை விரைந்து சரிசெய்யப்படும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை சிறிய வங்கிகள் என்பதால் நாட்டின் பரிவர்த்தனைகளில் வெறும் 0.5% மட்டுமே பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.