"திருமாவளவன் முதல்வரானால் நன்மை பயக்கும்" - ரவிக்குமார் எம்.பி.
இந்தியாவில் மீண்டும் வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. திருவாரூரில் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., “ சாதி வாரி கணக்கெடுப்பினை நடத்தி, அதற்கு ஏற்ப இடஒதுக்கீட்டினை உயர்த்திட வேண்டும் என தமிழ்நாடு முதல்அமைச்சர் குரல் கொடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுகத்தினர் பழங்குடியினர், ஆகியோர் இடஒதுக்கீட்டினை உயர்த்துவோம் என அறிவிக்க வேண்டும். பட்டியல் சமூகத்தினர் இட ஒதுக்கீட்டினை 18 சதவீத்த்தில் இருந்து 24 சதவீதமாக உயர்த்திட வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நல்ல தீர்ப்பினை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் யாரும் எதிர்பாராத விதமான தேர்தல் முடிவுகள் வந்துள்ளனர்.
இந்த முடிவுகள் மூலம் ஒரு வலுவான ஐயம் ஏற்படுகிறது. அது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்பது நம்பகமானதா? என்பது பற்றி ஐயம் தான். தேர்தலில் தோற்றதால் இதனை கூறவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தவிர்த்து, வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். அமெரிக்கா, ஜரோப்பியா போன்ற வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தாமல், வாக்குசீட்டு முறையை தான் பயன்படுத்துகின்றனர்.
எனவே இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை நம்பி இருப்பது நல்லதல்ல. மீண்டும் வாக்குசீட்டு முறையினை தேர்தல் நடைபெற வேண்டும். ஒரு சோதனைக்காக பாஜக வெற்றி பெறும் என நினைக்கின்ற இடத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் கூட வாக்குசீட்டு முறையினை பயன்படுத்தினால் உண்மையாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிந்து விடும். சீமான், ரஜினிகாந்த சந்திப்பு என்பது திரைத்துறையினர் இடையே நடந்த சந்திப்பாக கருதுகிறேன். நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் இந்தியா கூட்டணி சார்பில் லஞ்சம் கொடுத்த புகாரில் அதானிக்கு அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து குறித்து குரல் எழுப்புவோம்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் தொடங்கப்படும் போது, அந்த கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும். தங்களுடைய தலைவரும் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கட்சி தொடங்கப்படுகிறது. எங்கள் தலைவர் திருமாவளவன் தேர்தல் அரசியலில் 25 ஆண்டுகளும். அரசியல் பாதையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தனது சொந்த முயற்சியில் கட்சியை தொடங்கி தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகியுள்ளார். அத்தகைய ஆளுமை மிக்க தலைவர் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக வந்தால், அது தமிழ்நாட்டிற்கு நன்மை தான் பயக்கும்” என்றார்.