தும்பை விட்டு வாலை பிடிப்பதா? - திமுக அரசை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்!

 
udhayakumar

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிப்படை தன்மையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை சர்ச்சையை கிளப்பியுள்ளது. அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பே கேரள அரசுக்கு துணை போகும் விதமாக அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டதாகவும் இதனால் 5 மாவட்ட மக்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதைக் கண்டித்து வரும் 9ஆம் தேதி 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

udhayakumar

அணையின் உண்மை நிலவரம் குறித்து கண்டறிய இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வடகிழக்கு பருவமழையால் அணையின் நீர் மட்டம் அதிகரிக்கிறது. அணையை திறக்கும் உரிமை தமிழகத்திற்கு தான் இருந்தது. அதை பராமரிக்கும், அணை கையாளும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது. ஆனால் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுத் துறை அதிகாரிகள் ஆகியோர் இல்லாமல் நீர் திறக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காப்பது உள்நோக்கமா அல்லது அரசியல் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை குறித்து அரசு மவுனம் காப்பது ஏன்?. திமுக அரசு உண்மையை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துச்சொல்ல தயங்குவதையும் பின்வாங்குவதையும் வலியுறுத்தி 5 மாவட்டங்களில் 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 142 அடி நீர் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தீர்ப்பு பெற்று தந்த பிறகும் தமிழக அரசு பாராமுகத்துடன் அக்கறையில்லாமல் இருப்பது விவசாயிகளை அச்சம் அடையச் செய்துள்ளது. எனவே, அணை திறப்புக்கு உரிய விளக்கம் விசாரணை மேற்கொண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.