இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா - ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்ற சந்திப்பாக மாறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தமிழக மக்களின் உரிமைக்காக அமித் ஷாவை சந்தித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக பார்க்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்ற சந்திப்பாக மாறியுள்ளது. தமிழகத்தின் உரிமைகளை பெற்று தருவதற்காகவே எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துள்ளார் என கூறினார்.