“கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது”... சசிகலாவை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்
சசிகலா சுற்றுப்பயணம் என்ற பெயரில் ஆடி மாதத்தில் சுற்றுலா செல்வதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை சமயநல்லூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கள்ளச்சாராய, போதை விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றுள்ளார் சசிகலா. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம். சிலரின் உள்ளடி வேலைகளின் காரணமாகவே அதிமுக ஆட்சியை இழந்தது. 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. அவர் சார்ந்த சமூக மக்களுக்காக ஏதாவது செய்ததாக சசிகலாவால் முடியுமா? ஜெயலலிதாவின் பின்புலத்தை காட்டி சுயநலமாக தன்னை தான் வளர்த்துக் கொண்டார் சசிகலா. தவிர மக்களுக்கு எதுவும் அவர் செய்ததில்லை.
திருநாவுக்கரசர், காளிமுத்து, திண்டுக்கல் சீனிவாசன், சேடபட்டி முத்தையா போன்றோர் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதற்கு யார் காரணம்? இதை எந்த மேடையிலும் விவாதிக்க தயார். வசதி இருந்தும், வாய்ப்பு இருந்தும் சசிகலா நம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பாவப்பட்ட, ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு ஏதாவது அவர் செய்திருக்கிறாரா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என சொன்ன சசிகலா, இப்போது திடீரென மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். எந்த வார்த்தையை நம்புவது? அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என உண்மையிலேயே நினைத்தால் ஜானகி போல் சசிகலாவும் ஒதுங்கிகொண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என்றார்
...