சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..!
ஆனால், நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில், தரைக்காற்றின் வேகம் இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கிறது. இதனால், சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் எண்ணூர் பகுதியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது, “வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ தூரத்தில் சுமார் 6 மணி நேரம் அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை, ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.


